அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம்...!விரைவில் விரிவுபடுத்தப்படும்...!
- IndiaGlitz, [Monday,June 07 2021]
அனைத்து சாதியினரும் கோவில் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள வடபழனியில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய், சொத்து மதிப்பை தமிழக அரசு மீட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சாலிகிராமம் காந்தி நகரில் இருக்கும் தனியார் வளாகங்கள், கால்வாய்களால் ஆக்கிரமம் செய்யப்பட்டிருந்த 5.5 ஏக்கர் நிலங்கள் உள்ளிட்டவற்றை, அறநிலையத்துறை மீட்டுள்ளது. கோவில் சார்பாக மீட்கப்பட்ட இடங்களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு கூறியிருப்பதாவது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் விரிவுபடுத்துவது குறித்து முக்கிய நடவடிக்கைகளை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் எடுப்பார். இத்திட்டம் 100 நாட்களில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1971-ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் துவங்கிய போராட்டத்தை, கலைஞர் கருணாநிதியும் வளர்த்தி போராடி வந்தார். தற்போது திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்களால், இந்த 2021 நடப்பாண்டில் இத்திட்டம் முழுமையடைய வேண்டும். அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதியைச் சார்ந்த மாணவர்களுக்கும், 100 நாட்களில் பணி நியமனம் உறுதி செய்யப்படும். மேலும் இதில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், என்ற திட்டத்தின் கீழ் கோவில் கருவறையில் உள்ள தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதன் முறையில் பணி நியமனம் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு-வின் முடிவிற்கு, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.