இன்று முதல் அனைத்து வங்கிகளையும் மூட உத்தரவு: அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,April 13 2020]
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அனைத்து வங்கிகளையும் இன்று முதல் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டது. இருப்பினும் சமீபத்தில் வங்கிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அனைவரும் மாஸ்க் அணிந்து வங்கிகளுக்கு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும் இந்த அறிவுறுத்தலை வங்கி வாடிக்கையாளர்கள் சரியாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து வங்கிகளையும் மூட வேண்டும் என்று வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் அவர்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஆம்பூரில் ஏற்கனவே 13 பேர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று பரவியுள்ளதை அடுத்து இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆம்பூரில் தற்காலிக காய்கறி சந்தைகளும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் பள்ளி மைதானம் உள்பட 4 இடங்களில் செயல்பட்ட தற்காலிக காய்கறி சந்தைகள் செயல்பட்டு வந்த நிலையில் இந்த சந்தைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.