அதிகரிக்கும் XXB.1.16 கொரோனா பரவல்… ஆபத்தை ஏற்படுத்துமா?

  • IndiaGlitz, [Saturday,April 01 2023]

இந்தியா முழுக்க தற்போது உருமாறிய கொரோனா XXB.1.16 வகை தொற்று அதிகளவில் பரவிவருகிறது. இதனால் பாதிப்புகள் அதிகரிக்குமா என்று மக்கள் அச்சம் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்த விளக்கங்களை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் – கொரோனா நோய்த்தொற்றின் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது அலை பாதிப்புகளை சந்தித்தோம். இந்தப் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதில் எக்ஸ்பிபி மற்றும் பிஏ2 வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனைகளிலும் இன்றுமுதல் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய மருத்துவர்கள் XXB.1.16 என்பது ஒமிக்ரானின் துணை வேரியண்ட் என்றும் இதனால் தீவிர பாதிப்புகள் இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் XXB.1.16 வகை வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவது கவலை தருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

XXB.1.16 வகை வைரஸ் மோசமான அறிகுறிகளை ஏற்படுத்துவது இல்லை

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கும் இந்த வகை வைரஸ்கள் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன

மிதமான இருமல், சளி மற்றும் லேசான காய்ச்சல் போன்ற பாதிப்புகளை மட்டுமே இதுவரை ஏற்படுத்தி வருகிறது. மேலும் 100 நோயாளிகளில் ஒருவருக்கு மட்டுமே மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் XXB.1.16 வகை தொற்று குறித்து மருத்துவர்கள் விளக்கம் தெரிவிக்கின்றனர்.

முதலில் டெல்லியில் இந்த XXB.1.16 வகை தொற்று பரவிய நிலையில் தற்போது மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரித்து இருக்கிறது.

தமிழகத்தில் இதுவரை குறைவான அளவே கொரோனா நோய்த்தொற்று அறியப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 120 ஐ தாண்டியுள்ளது.

மேலும் மகாராஷ்டிராவில் 694, கேரளாவில் 654, குஜராத்தில் 384, டெல்லியில் 295, கர்நாடகாவில் 205 என பாதிப்பு எண்ணிக்கை பாதிவாகி இருக்கிறது. இதில் பெருமளவில் XXB.1.16 வகை தொற்றே அதிகம் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.