ஏலியன்கள் US உடன் ரகசிய ஒப்பந்தத்தில் இருக்கிறதா??? பதற வைக்கும் தகவலை வெளியிட்ட உயர் அதிகாரி!!!

  • IndiaGlitz, [Wednesday,December 09 2020]

 

வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மையா என்பது இன்னும் முடிவு செய்யமுடியாத விஷயமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த முன்னாள் ஜெனரல் அதிகாரி ஒருவர் வேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மைதான். அவர்கள் பல ஆண்டுகளாகவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு அந்நாட்டு அரசாங்களுக்கு உதவி செய்து வருகின்றனர். மேலும் விண்வெளி தொடர்பான ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர் எனும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டு உள்ளார்.

இத்தகவலை நியூயார்க் மெயில் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் முன்னாள் ராணுவ ஜெனரலாகப் பணிபுரிந்து வந்தவரும் இந்நாள் பேராசிரியருமாக இருந்து வரும் ஹைம் எஷெட் என்பவர்தான் இத்தகவலை கூறி இருக்கிறார். அதில், “வேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மை என்றும் அவர்கள் அரசாங்கங்களுடன் ரகசியமாக வேலை செய்கிறார்கள்” என்றும் தெரிவித்து இருக்கிறார். அதோடு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் வேற்று கிரகவாசிகளுடன் நீண்டகாலமாக தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹைம் எஷெட் 1981-2010 வரை இஸ்ரேல் நாட்டின் விண்வெளி பாதுகாப்புத் திட்டத்திற்கு தலைமை அதிகாரியாக செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏலியன்கள் குறித்து இவர் வெளியிட்ட கருத்துகளைத் தவிர “மனிதர்கள் வேற்று கிரகவாசிகளை பார்த்து பயப்படுகின்றனர். இதனால்தான் அவர்கள் ரகசியமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இப்படி ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அமெரிக்க மற்றும் இஸ்ரேலுடன் ஏலியன்கள் ஒப்பந்தம் செய்திருக்கின்றன” எனும் தகவலை இஸ்ரேல் நாட்டின் Yediot Aharonot எனும் செய்தித்தாள் வெளியிட்டு இருக்கிறது.

இந்தக் கருத்துகள் தற்போத விஞ்ஞானிகளிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது வேற்று கிரகவாசிகளைப்பற்றிய ஆய்வுகள் மக்கள் மத்தியில் எப்போதும் சுவாரசியம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும்போது ஒருநாட்டின் ஜெனரல் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் எனக் கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஹைம் தெரிவித்த மற்றொரு கருத்தும் கடும் பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.

அதாவது அமெரிக்க அரசாங்கத்திற்கும் ஏலியன்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது. பூமியில் ஆய்வுகளை மேற்கொள்ள ஏலியன்கள் இத்தகைய ஒப்பந்தங்களை செய்திருக்கின்றன. மேலும் அவர்கள் மனிதர்களுக்கும் உதவி செய்யவே விரும்புகின்றனர். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த ஆய்வுகளுக்காக செவ்வாய் கிரகத்திற்கு சென்ற அமெரிக்க விஞ்ஞானிகளுடன் ஏலியன்களும் செவ்வாய் கிரகத்தில் தங்கி இருக்கின்றனர் எனும் தகவலை ஹைம் வெளியிட்டு உள்ளார்.

இத்தகைய கருத்துகளால் பூமியில் ஏலியன்கள் ரகசியமாக வாழ்கிறார்களா? அதுவும் அரசாங்கத்திற்கு உதவி செய்கிறார்களா? விண்வெளி குறித்த ஆய்வுகளுக்காக விஞ்ஞானிகளுடன் செவ்வாய் கிரகத்திற்கு ஏலியன்களும் சென்றிருக்கிறார்களா?இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை சிலர் எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.