உலகத்தையே சொந்தமாக்க நினைத்த மாவீரன் அலெக்சாண்டர் நினைவு தினம் இன்று...
- IndiaGlitz, [Wednesday,June 10 2020]
Lord of Asia என்றழைக்கப்படும் கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் மாவீரன் அலெக்சாண்டர் உலகில் பெரும் பகுதிகளை வெற்றிக் கொண்ட வரலாற்றை மட்டுமே நாம் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறோம்.அவரது இறுதிக் காலமும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விடயம்தான். எகிப்தில் ஒரு பகுதியான மக்கெடோனியா சாம்ராஜ்ஜியத்தின் மன்னன் இரண்டாம் பிலிப்புக்கு கிமு. 20 ஜுலை 356 ஆம் ஆண்டு மகானாகப் பிறந்தார். தந்தை கொலை செய்யப்பட்ட பிறகு தனது 20 ஆவது வயதில் அரியணை ஏறுகிறார்.
பதவியேற்ற உடன் எகிப்தின் பெரும்பாலான பகுதிகளை மக்கெடோனியாவின் கீழ் கொண்டு வந்தார். உலகில் அனைத்துப் பகுதிகளையும் தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்துவிட வேண்டும் என விரும்பிய ஒரு பேராசை மன்னனாகத்தான் அன்றைய வரலாறு இவரை அடையாளம் காண்கிறது. உலகமே இவரைப் பார்த்து நடு நடுங்குகிறது. அடுத்து அலெக்சாண்டரின் பார்வை எந்த நாட்டின் மீது இருக்குமோ? என்று மன்னர்கள் பயந்து கிடக்கின்றனர். இப்படியான வெறிக்கொண்ட படையெடுப்பில் அலெக்சாண்டர் அடுத்தடுத்த 13 ஆண்டுகளில் துருக்கி, எகிப்து, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பல நாடுகளை தன் காலடியில் கொண்டு வந்தார்.
அவரது கடைசி பார்வையாக இந்தியா மீது இருந்ததாகவும் கூறப்படுகிறது. சிந்து நதிக்கரையின் வழியாக பஞ்சாப் மன்னன் ஃபோரஷை கடுமையாகத் தாக்கி போரில் முறியடிக்கவும் செய்தார். ஃபோரஷ் மன்னனை பார்த்து உங்களை எப்படி நடத்த வேண்டும் எனக் கேட்டதாகவும் அதற்கு ஃபோரஷ் மன்னன், “என்னை ஒரு மன்னன் போல நடத்துங்கள்” எனக் கூறியதாகவும் வரலாறு சொல்கிறது. உடனே அலெக்சாண்டர் ஃபேராஷ் ராஜ்ஜியத்தை அவரிடமே ஒப்படைத்துவிட்டு மக்கெடோனியாவின் பாதுகாப்புக்குட் பட்ட ராஜ்ஜியமாக அறிவித்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
அலெக்சாண்டர் எந்த போரிலும் தோற்றதாக சரித்திரமே இல்லை எனக் கூறப்படுகிறது. அதோடு அவரது ஆசை என்பதற்கும் அளவே இல்லை என்றே வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படி உலகமே பார்த்து வியந்த ஒரு அசாத்திய திறமைக் கொண்ட அலெக்சாண்டர், தொடர்ந்து நடத்திய போர்களினால் சோர்ந்து போகிறார். படையெடுத்துக் கொண்டு வெளியே போன சமயத்தில் கடுமையாக நோய் வாய்ப்படுகிறார். நாட்டிற்கு திரும்பிச் சென்றுவிடலாம் என ஆலோசனை கூறும் மந்திரிகளின் பேச்சை கேட்க மறுக்கிறார். கடைசியாக கி.மு. 323 ஜுன் 10 அல்லது 11ஆம் தேதிகளில் பாபிலோனியாவிலுள்ள இரண்டாம் நெபுகன்ட் நேசர் அரண்மனையில் இறந்து போகிறார்.
இறக்கும் போது நடந்த நிகழ்வுகள்தான் நம்மை வியக்க வைக்கின்றன. உலகத்தையே ஒட்டு மொத்தமாக வாரிச் சுருட்டிக்கொள்ள நினைத்த ஒரு மாவீரன் தனது மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்ல நினைத்திருக்கிறர். “நான் இறந்தவுடன் திறந்து இருக்கும் எனது கைகள் வெளியே தெரிமாறு சவப்பெட்டி செய்யுங்கள் என்றார். எல்லோரும் என்னை அந்தக் கோலத்தில் பார்த்த பிறகு அடக்கம் செய்யுங்கள்” எனவும் கேட்டுக்கொண்டார்.
மன்னனின் வார்தைகளைப் கேட்டு வியப்படைந்த படைத் தலைவர்களில் ஒருவர் “அரசே எதற்காக இப்படி செய்யச் சொல்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அலெக்சாண்டர், “உலகையே வென்ற பேரரசனாகிய அலெக்சாண்டர், வெறுங்கையுடன்தான் மேலுலகம் சென்றுள்ளான் என்பதை மக்கள் உணர்வதற்காகத்தான்” என்று பதில் சொன்னார். உலகையே வென்றுவிட முடியும் என்று அசாத்தியத் துணிச்சல் கொண்ட ஒரு மாமன்னன் அதை ஓரளவிற்கு செய்தும் காட்டியிருக்கிறார். ஆனால் அவரே கடைசியில் சொல்லுகின்ற வார்த்தை ஒன்றும் இல்லை என்பதைத்தான்.