தனுஷின் அடுத்த படத்தில் ரஜினி பட வில்லன்!
- IndiaGlitz, [Monday,January 13 2020]
தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அவர் நடித்து வரும் ’கர்ணன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்தப் படம் தனுஷின் வித்தியாசமான படங்களில் ஒன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் தனுஷின் முதல் பாலிவுட் திரைப்படமான ’ராஜண்ணா’ என்ற படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியது. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சாரா அலிகான் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீர் திருப்பமாக அக்ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அக்ஷய்குமார் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .இந்தப் படத்தில் அக்ஷய்குமார் இணைய இருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிப்பதோடு இந்த படத்தின் பட்ஜெட் எகிறும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் சில பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் இணைவார்கள் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.