இந்தியாவையே புரட்டி போட்ட மணிபூர் நிர்வாண ஊர்வலம்? சினிமா பிரபலங்கள் எதிர்ப்பு…!

  • IndiaGlitz, [Thursday,July 20 2023]

கடந்த மே மாதத்தின் துவக்கத்தில் இருந்தே மணிப்பூர் மாநிலத்தில் கொடூரமான வன்முறைகளும் கலவரங்களும் வெடித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது இணைய வசதிகள் சரிசெய்யப்பட்டு இருக்கும் நிலையில கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டி போட்டிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக கொடூரமான கலவரச் சம்பங்கள் அரங்கேறி வருகின்றன. காரணம் மைதேயி எனும் சமூகத்தைச் சார்ந்த மக்கள் தங்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதற்கு அதே மாநிலத்தில் வசித்துவந்த குக்கு மற்றும் நாசா பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதனால் ஆவேசமான மைதேயி இனத்தவர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குக்கு மற்றும் நாசா பழங்குடி இனத்தவர்கள் மீது கொடூரமான வன்முறை சம்பவங்களை நடத்தினர். இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்கள் நாசமாக்கப்பட்டு ஆங்காங்கே பாலியல் அத்து மீறல்களும் நடைபெற்றது. இதுவரை இந்த வன்முறையினால் 135 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மணிப்பூரில் நடக்கும் வன்முறையை ஒடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. மேலும் வன்முறை குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இளம் பெண்களை சாலையில் நிர்வாணாக இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த விடியோவில் மைதேயி இனத்தைச் சார்ந்த இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து 20 வயது மதிக்கத்தக்க 2 பெண்களை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்றுள்ளனர். மேலும் அவர்களை கொடூரமாகத் தாக்கி அவர்களை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. குக்கு இனத்தைச் சேர்ந்த இந்தப் பெண்களை அவர்களின் வீட்டில் இருந்து இழுத்து வரும்போதே வீட்டைக் கொழுத்திவிட்டு மேலும் அதற்கு தடையாக இருந்த அவரது சகோதரரைத் தாக்கி கொலை செய்துவிட்டதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.

மணிப்பூரில் இளம்பெண்கள் இருவர் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் நிலைகுலைய வைத்திருக்கிறது. இதனால் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக இருந்துவரும் நடிகர் அக்ஷய் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், “மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். வெறுப்படைந்தேன். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன். இதுபோன்ற கொடூரமான செயலை யாரும் செய்ய நினைக்க மாட்டார்கள்’‘ என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு முக்கிய நடிகரான சஞ்சய் தத், “மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் வீடியோ அதிர்ச்சியாகவும் வேதனை அளிப்பதாகவும் இருந்தது. இதுபோன்ற இழிவான செயல்களை எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற தெளிவான செய்தியை அனுப்பி குற்றவாளிகள் மிகக் கடுமையாக தண்டிக்கப் படுவார்கள என்பதே எனது நம்பிக்கை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மக்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்ற நடிகர் சோனுசூட் மணிப்பூர் வீடியோ அனைவரின் ஆன்மாவையும் உலுக்கியது. அணி வகுத்தது மனித நேயம்… பெண்கள் அல்ல..” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை ரிச்சா சாதா “அவமானம், கொடூரமானது, சட்டமற்றது என்று பொங்கியிருக்கிறார்.

நடிகை ரேணுகா சஹானோ “மணிப்பூரில் நடக்கும் கொடுமைகளைத் தடுக்க யாரும் இல்லையா? இரண்டு பெண்களின் அந்த குழப்பான வீடியோவால் நீங்கள் நடுங்கவில்லையா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11 வரை நடைபெற இருக்கும் நிலையில் மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் அதோடு நிர்வாணமாக பெண்கள் இழுத்து செல்லப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.