ஜோதிகா படத்தை அடுத்து ஆன்லைன் வெளியாகிறதா ராகவா லாரன்ஸ் படம்?
- IndiaGlitz, [Saturday,April 25 2020]
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்குகள் இப்போதைக்கு திறக்கப்பட மாட்டாது என்று தெரிகிறது. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தாலும் சமூக விலகலை தொடர வேண்டும் என்பதால் திரையரங்குகள் திறப்பதற்கு இன்னும் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனை அடுத்து ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக ஆன்லைனில் வெளியாக இருப்பதாகவும் இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து சூர்யா, ஜோதிகா படங்களுக்கு ரெட் கார்டு விதித்துள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்சய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கிய ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படமும் நேரடியாக ஆன்லைனில் ஒளிபரப்ப பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது எடிட்டிங், கிராபிக்ஸ் உள்பட போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை வீட்டிலிருந்து அந்தந்த கலைஞர்கள் செய்து வருவதாகவும் இந்த படம் வரும் ஜூன் மாதம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து திரையரங்குகள் திறக்க கால தாமதமாகும் பட்சத்தில் ‘லட்சுமி பாம்’திரைப்படத்தை நேரடியாக ஆன்லைனீல் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், குறிப்பாக டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் ஜூன் மாதம் இந்த திரைப்படம் ஆன்லைனில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மேலும் பல திரைப்படங்கள் ஆன்-லைனில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் திரையரங்குகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.