அஜித் ஜோடியாக உலக அழகி.. படப்பிடிப்புக்கு முன்பே முடிந்த வியாபாரம்.. 'ஏகே 62' படத்தின் மாஸ் தகவல்கள்!

  • IndiaGlitz, [Monday,January 16 2023]

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று உள்ளது என்பதும் இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து தொடர்ச்சியாக வசூல் சாதனை செய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஒரு பக்கம் ’துணிவு’ படத்தின் வசூல் விவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’ஏகே 62’ என்ற படத்தின் மாஸ் தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இரட்டை சந்தோசத்தை கொடுத்துள்ளது.

அஜீத் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’ஏகே 62’ படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா அல்லது த்ரிஷா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அஜித் ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2000ஆம் ஆண்டு அஜித் நடித்த 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' என்ற திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கிய வேடத்தில் நடித்த நிலையில் தற்போது 23 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அஜித்துடன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி 'ஏகே 62' படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை என்ற நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையின் வியாபாரம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட ஆகிய நான்கு மொழிகளின் டிஜிட்டல் உரிமையை நெட்ப்ளிக்ஸ் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது என தெரிய வருகிறது. இந்த தகவலை நெட்ப்ளிக்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.