சென்னையின் பழமையான ஸ்டுடியோவில் 'தல 56'
- IndiaGlitz, [Monday,September 07 2015]
அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் நடந்து முடிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படப்பிடிப்பில் அஜீத் மற்றும் ராகுல் தேவ் மோதும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 'தல 56' படக்குழுவினர் சென்னையின் பழமையான ஸ்டுடியோவான ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு வந்து உலக உருண்டை போன்று சுற்றிக்கொண்டிருக்கும் ஏவிஎம் லோகோவை படம் பிடித்தனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, 'தல 56' படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளதாகவும், அது மட்டுமின்றி இந்த படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் இதே இடத்தில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏ.எம்.ரத்னம் அவர்கள் தயாரித்து வருகிறார். தல ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ள இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்துள்ளனர். மேலும் ராகுல்தேவ், கபீர்கான், அஸ்வின், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 'வீரம்' சிவா இயக்கி வருகிறார்.