அஜித்தின் எச்சரிக்கை மற்றும் வருத்தம் தெரிவிக்கும் அறிக்கை

  • IndiaGlitz, [Sunday,August 20 2017]

அஜித் நடித்த விவேகம் திரைப்படம் இன்னும் 4 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் அஜித் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், வருத்தம் தெரிவிக்கும் வகையிலும் தனது சட்ட ஆலோசகர் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் சமூக வலைத்தளங்களில் தனது பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, தனது பெயரால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய சட்ட ஆலோசகரின் அறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு:

நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் சட்ட ஆலோசகர் என்ற முறையில் அவர் ஆணையின்படியும், அவர் சார்பாகவும் நான் வெளியிடும் பொது அறிவிப்பு இது.

25 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்து வரும் எனது கட்சிக்காரர் திரு.அஜித்குமார், நேர்மையான முறையில் வரி செலுத்துபவர், சமூகத்துக்கு தனிப்பட்ட முறையில் உதவுபவர், மற்றும் இந்த நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்படும் ஒரு குடிமகன் ஆவார்.

எனது கட்சிக்காரர் எந்த அரசியல் இயக்கத்தையும் (பிராந்திய மற்றும் தேசிய கட்சிகள் உள்பட) சார்ந்தவர் இல்லை. தனது சுய சிந்தனைப்படி ஜனநாயக முறையில் வாக்களிப்பவர். தனது ஜனநாயக நம்பிக்கையையும், சிந்தனையையும் தனது ரசிகர்கள் இடையேயும், பொதுமக்கள் இடையேயும் எப்பொழுதும் திணித்ததும் இல்லை. எனது கட்சிக்காரர் எந்த வணிக சின்னத்தையும், பொருளையும் நிறுவனத்தையும் அமைப்பையும், சங்கத்தையும் சார்ந்து அதன் விளம்பரதூதராக, நேரடியாகவோ, மறைமுகமாகவோ தற்போது செயல்படுவது இல்லை.

எனது கட்சிக்காரர், தனது வளர்ச்சிக்கு ஊக்க துணையாக இருந்த உண்மையான ரசிகர்கள், தன்னை பின்பற்றுபவர்கள், திரை பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள், மற்றூம் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் தன்னை அங்கீகரிக்கப்பட்ட ரசிகர் மன்றம் என்று ஒன்று இல்லை என்று தெளிவுபடுத்துகிறார்.

எனது கட்சிக்காரருக்கு அதிகாரபூர்வ வலைப்பக்கமோ, கைப்பிடியோ எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் குறிப்பாக முகநூல், டுவிட்டர், ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் இல்லை இல்லை என்பதை தெரிவிக்கிறார். ஆயினும் சில தனிப்பட்ட அங்கீகாரம் இல்லாத, சுய அதிகாரம் எடுத்து கொண்ட சில நிறுவனங்கள், மற்றும் தனிப்பட்ட நபர்கள் தங்களுடைய அரசியல் மற்றும் சமூக ரீதியான கருத்துக்களை எனது கட்சிக்காரரின் கருத்தாக பிரகடனப்படுத்தி வருகிறார்கள். இதற்கு அவர்கள் எனது கட்சிக்காரரின் பெயரையும் படத்தையும் அவரின் அனுமதி இல்லாமல் அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் எனது கட்சிக்காரர் சார்ந்த திரைத்துறையையும், பத்திரிகையாளர்களையும், விமர்சகர்களையும் பல தனி நபர்களையும், பொதுமக்களையும் கூட தகாத முறையில் வன்மம் பேசி சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமாக தாக்கி வருவது எனது கட்சிக்காரருக்கு கடும் மன உளைச்சலை தருகிறது. இப்பேர்ப்பட்ட நபர்களை கண்டுபிடித்து களை எடுக்கும் அதே நேரத்தில் இவர்களது செயல்களால் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் என் கட்சிக்கார்ர் தன் மன வருத்தத்தை தெரிவித்து கொள்கிறார்.

மேற்கூறிய இந்த காரணத்துக்காக வெளி இடப்படும் இந்த அறிவிப்பு கூறுவது என்னவென்றால்.

1. எனது கட்சிக்காரர் எந்த ஒரு தனி நபரையோ, குழுவையோ, அமைப்பையோ அல்லது சமூக வலைப்பக்கத்தையோ, கைப்பிடியையோ அங்கீகரிக்கவில்லை. மற்றும் தனது பெயரையோ, புகைப்படத்தையோ தன் அனுமதி இல்லாமல் உபயோகிப்பதை தன் சார்பில் சமூக அரசியல் மற்றும் தன் சார்பாக தனிப்பட்ட கருத்தையோ வெளியிட அனுமதிக்கவில்லை என்பதை அறிக.

2. தற்போது அவர் எந்த ஒரு வணிக சின்னத்திற்கும், பொருளுக்கும், நிறுவனத்துக்கும் அமைப்புக்கும் விளம்பரதூதர் இல்லை.

இவ்வாறு அஜித்தின் சட்ட ஆலோசகரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.