உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் அஜித் பட தயாரிப்பாளர்.. ஏற்பாடுகளை செய்யும் தமிழ் நடிகர்..!
- IndiaGlitz, [Wednesday,September 25 2024]
அஜித்தின் ’மங்காத்தா’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த துரை தயாநிதி உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், அவருடைய சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அமெரிக்காவில் உள்ள தமிழ் நடிகர் ஒருவர் ஏற்பாடு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சகோதரர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முக. அழகிரி மகனும் திரைப்பட தயாரிப்பாளருமான துரை தயாநிதி, கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.
முதலில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பதும், நேற்று அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தற்போது உயர் சிகிச்சைக்காக துரை தயாநிதியை அமெரிக்கா அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சை ஏற்பாடுகளை நடிகர் நெப்போலியன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இன்னும் சில நாட்களில் துரை தயாநிதி சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’வாரணம் ஆயிரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமான துரை தயாநிதி, ’பையா, ’நான் மகான் அல்ல’, ’வானம்’, ’மங்காத்தா’, ’தகராறு’, ’வடகறி’ உள்ளிட்ட சில படங்களை தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.