'விவேகம்' டீசர் ரிலீஸ் தேதி?

  • IndiaGlitz, [Monday,April 03 2017]

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் அஜித், காஜல் அகர்வால் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஏனெனில் படக்குழுவினர் வரும் 19ஆம் தேதி இந்தியா திரும்பவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 17 அல்லது 18ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்கேரியாவில் ஒருபக்கம் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் சென்னையில் இந்த படத்தின் டீசர் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் வரும் மே 1ஆம் தேதி, அஜித் பிறந்த நாளில் வெளிவர அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.