போலீசாரே பாராட்டிய கொள்ளை.. இந்த உண்மைச்சம்பவம் தான் 'துணிவு' கதையா?
- IndiaGlitz, [Thursday,September 22 2022]
போலீசாரே பாராட்டிய ஒரு வங்கிக் கொள்ளையின் உண்மை சம்பவத்தின் கதைதான் ‘துணிவு’ படத்தின் கதை என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘துணிவு’ . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் அஜீத் ரசிகர்கள் இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை வங்கிக்கொள்ளை குறித்தது என்று ஏற்கனவே தெரிய வந்தாலும் தற்போது இது பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் தழுவல் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த 1985ஆம் ஆண்டு 12 முதல் 15 சீக்கியர்கள் காவல்துறை சீருடை அணிந்து பயங்கர ஆயுதங்களுடன் வங்கியில் கொள்ளையடிக்க சென்றனர். அவர்கள் கொள்ளையடித்த மொத்த பணத்தின் மதிப்பு சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது. இந்திய வங்கி கொள்ளை வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய கொள்ளை என்றும் அதுமட்டுமின்றி இந்த கொள்ளை நடந்தபோது வங்கி ஊழியர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியை கொள்ளை அடித்தவர்கள் என ஒருவர் கூட சிறிய காயம் கூட அடையவில்லை என்றும், அந்த அளவுக்கு பக்காவாக திட்டமிட்டு நடந்த ஒரு பிரமாதமான கொள்ளை என்று போலீசாரே பாராட்டி இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் எச் வினோத் ‘துணிவு’ படத்தை எடுத்திருப்பதாக கூறப்படுவதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது