இந்திய ராணுவத்துடன் ரூ.165 கோடியில் ஒப்பந்தம்.. அஜித் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!
- IndiaGlitz, [Tuesday,August 08 2023]
நடிகர் அஜித் நடிகராக மட்டுமின்றி பைக் ஓட்டுநர், கார் ஓட்டுநர், உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் சிறந்த சமையல் செய்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி சமீப காலமாக அவர் ட்ரோன் தயாரிப்பிலும் உதவி செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
குறிப்பாக சென்னை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் இணைந்த தக்ஷா என்ற நிறுவனம் ட்ரோன்கள் தயாரிப்பதற்கு அஜித் ஆலோசனை வழங்கி வந்தார் என்பதும் இந்த நிறுவனம்
ஆஸ்திரேலியாவில் நடந்த உலக ட்ரோன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்திய ராணுவத்திற்கு 165 கோடி ரூபாய் மதிப்பில் 200 ட்ரோன்கள் தயாரித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அடுத்த ஒரு வருடத்தில் ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்திடம் தக்ஷா நிறுவனம் ஒப்படைக்கும் என்றும் கூறப்படுகிறது.
எனவே நடிகர் அஜித் இந்த ஒப்பந்தத்தில் தன்னுடைய பங்களிப்பை கொடுப்பார் என்றும், ட்ரோன் தயாரிப்பதில் தனது ஆலோசனையை கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மாநில அளவில் தக்ஷா நிறுவனம் ட்ரோன் தயாரிப்பில் முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் தற்போது இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் தயாரித்து கொடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.