அஜித், விஜய் படங்களின் ஓடிடி ரிலீஸ் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்..எத்தனை கோடி வித்தியாசம்?
- IndiaGlitz, [Wednesday,May 22 2024]
அஜித் மற்றும் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை ஒரே நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த இரு படங்களை வாங்கிய தொகையில் எத்தனை கோடி வித்தியாசம் என்ற தகவலும் தற்போது கசிந்து உள்ளது.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான அஜித், விஜய் ஆகிய இருவரது படங்களும் பிரம்மாண்டமாக உருவாகும் என்பதும் இவர்களது படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் அதை ஒரு திருவிழா போல் கொண்டாடி வருவார்கள் என்பதும் தெரிந்தது. மேலும் அஜித், விஜய் ஆகிய இருவரது படங்களுக்கும் ஓப்பனிங் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதால் இவர்களது படங்களின் வியாபாரமும் ஆச்சரியம் தரும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் ’குட் பேட் அக்லி’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.95 கோடிக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் அதற்குள் பிசினஸ் தொடங்கிவிட்டது என்பது ஆச்சரியமான தகவலாகும்.
அதேபோல் தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் இந்த படத்தை 110 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ’குட் பேட் அக்லி’ படத்தின் தொகையை விட ’கோட்’ படத்தின் தொகை 15 கோடி ரூபாய் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்படாவிட்டாலும் திரை உலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.