5வது முறையாக இணைகிறார்களா அஜித்-சிறுத்தை சிவா? தயாரிப்பாளர், இசையமைப்பாளர் யார்?

  • IndiaGlitz, [Tuesday,October 15 2024]

அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஏற்கனவே ' வீரம் ', ' வேதாளம் ', ' விவேகம் ' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய நான்கு படங்கள் வெளியாகி, எல்லாம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன என்பது தெரிந்தது. இந்த நிலையில், நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அஜித்துடன் மீண்டும் ஒரு படத்தில் இணையும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அதை அஜித் அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்றும் சிறுத்தை சிவா கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா, தற்போது கங்குவா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்காக நடந்த ப்ரோமோஷன் பேட்டியில், அவர் கங்குவா படத்தின் பல முக்கிய விஷயங்களை கூறியுள்ளார். அஜித்துடன் மீண்டும் இணையும் தகவலையும் தெரிவித்தார்.

கண்டிப்பாக அஜித்துடன் இணைந்து ஒரு படம் பண்ணுவேன், ஆனால் அதை நான் சொன்னால் சரியாக இருக்காது, அஜித் அவர்களே விரைவில் அறிவிப்பார், என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அஜித்தின் புதிய படத்தை சிறுத்தை சிவா இயக்க இருப்பதாகவே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பது உண்மை என்று தெரிகிறது. விரைவில் இருவரும் ஐந்தாவது முறையாக இணைவார்கள் என்றும், இந்த படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அஜித்-சிறுத்தை சிவா இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அனிருத் அல்லது தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், அடுத்த படத்தில் சிறுத்தை சிவாவுடன் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.