இவர் இனிமேல் விளையாடுவது கடினம்தான்… முக்கிய வீரர் குறித்து பகீர் கருத்து!

அஜின்கியா ரஹானே இனிமேல் இந்திய அணியில் இடம்பெறுவது கடினம்தான் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பரபரப்பு கருத்துக்கணிப்பு வெளியிட்டு உள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி வருபவர் ரஹானே. கோலி இல்லாத சமயங்களில் இவர் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார்.

இவர் சமீபகாலமாக ஃபார்ம் அவுட் ஆகியிருப்பதால் ரசிகர்கள் இவருடைய எதிர்காலம் குறித்து கடும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். இதற்கு முன்பு அவர் விளையாடிய கடைசி 20 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 4, 37, 24, 1, 0, 67, 10, 7, 27, 49, 15, 5, 1, 61, 18, 10, 14, 0, 4 ஆகிய ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

மேலும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கோலிக்குப் பதிலாக கேப்டன்சி பதவிவகித்த ரஹானே அடுத்த போட்டியில் அணியில் இருந்து விலக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதேசமயத்தில் அந்தப் போட்டியில் கலந்துகொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் குவித்து இருந்தார். அடுத்த இன்னிங்ஸில் 50 க்கும் மேல் ரன்களை குவித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்திருந்தார். இதனால் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலக்க முடியாத அளவிற்கு ஷ்ரேயாஸ் தன்னுடைய இடத்தையும் தக்க வைத்துக்கொண்டார்.

இதனால் ரஹானே இருக்க வேண்டிய இடத்தில் தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக துணைகேப்டன் என்ற அடிப்படையில் ரஹானே தொடர்ந்து அணியில் இடம்பெற்று வந்தார். தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு உள்ளதை அடுத்து ரஹானேவின் நிலைமை கேள்விக்குரியாகி இருக்கிறது.

மேலும் தெனஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 18 வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள ரஹானே விளையாட அனுமதிக்கப்படுவாரா? என்ற சந்தேகத்தையும் சில முன்னணி வீரர்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ரஹானேவுக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம். அவர் தொடர்ந்து ரன்களை குவிக்க திணறி வருகிறார். இதனால் அவருக்கு பிளையிங் 11-இல் இடம் கிடைப்பது கடினம். ஷ்ரேயாஸ் ஐயர் நல்ல பார்மில் இருப்பதாலும், முதல் போட்டியிலேயே திறமையை நிரூபித்து விட்டதாலும் இனி அவருக்குத்தான் இடம் கிடைக்கும்.

ஷ்ரேயாஸை அணி நிர்வாகத்தால் கூட நீக்க முடியாது. மறுபக்கம் ஹனுமா விஹாரியும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது ரஹானே விளையாட வாய்ப்பில்லை. அதன்பிறகு அவர் ஓரம்கட்ட வாய்ப்புள்ளது என்று கவுதம் கம்பீர் கூறியிருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்பி இருக்கிறது.