உலக வங்கியின் தலைவராகும் இந்தியர்… யார் இந்த அஜய் பங்கா?

  • IndiaGlitz, [Friday,March 31 2023]

அமெரிக்க வாழ் இந்தியரான அஜய் பங்கா என்பவர் உலக வங்கியின் தலைவராகப் போட்டியின்றி தேர்வுசெய்யபட இருக்கிறார். இந்தத் தகவல் இந்திய மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக அளவில் மதிப்பு மிக்க பொறுப்புகளில் ஒன்றாக உலகவங்கித் தலைவர் பதவி கருதப்படுகிறது. தற்போது உலக வங்கியின் தலைவராக இருக்கும் மால்பாஸ் உலகவங்கியின் கால மாற்றக் கொள்கைக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவருடைய பதவிக்காலம் முடிவதற்கு ஒரு ஆண்டு காலத்திற்கு முன்பே பதவியிலிருந்து விலக்கப்படுவார் எனும் தகவல் கூறப்பட்டது. இதையடுத்து மால்பஸ் வரும் ஜுன் மாதம் பதவி விலக இருக்கிறார்.

இந்நிலையில் உலக வங்கியின் அடுத்த தலைவர் வேட்பாளராக அஜய் பங்காவை பிப்ரவரி 23 ஆம் தேதி அதிபர் ஜோபைடன் முன்மொழிந்தார். இதைத் தொடர்ந்து உலக வங்கித் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் மார்ச் 28 உடன் முடிவடைந்த நிலையில் இப்பதவிக்கு வேறு யாரும் பரிந்துரைக்கப்படவில்லை. இதனால் அடுத்த உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா நியமிக்கப்படுவார் எனும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மகாராஷ்டிராவின் புனே நகரில் பிறந்தவரான அஜய் பங்கா டில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்பு அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பயின்ற இவர் நிர்வாகப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து நெஸ்லே இந்தியா, சிட்டிகுரூப் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பதவி வகித்த அவர் மாஸ்டர்காட்டின் தலைவர் மற்றம் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இந்திய அரசு இவருக்குக் கடந்த 2016 இல் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்துவரும் அஜய் பங்கா உலக வங்கியின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். இதற்கான தேர்வு நடவடிக்கைகளை உலக வங்கி விரைவில் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.