கல்யாணம் வேணும்… மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 60 வயது முதியவர்!

  • IndiaGlitz, [Monday,March 15 2021]

ராஜஸ்தானில் 60 வயதான முதியவர் ஒருவர் தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்குமாறு பிள்ளை மற்றும் பேரன், பேத்திகளிடம் கேட்டு இருக்கிறார். அதற்கு இத்தனை வயதில் திருமணம் தேவையா என மறுப்புத் தெரிவித்து உள்ளனர். இதனால் விரக்தியடைந்த அந்த முதியவர் 11 ஆயிரம் வோல்டேஜ் மின்சாரம் உள்ள மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தோல்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சோபரான் சிங்கின்(60) மனைவி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து இருக்கிறார். இந்நிலையில் 5 மகன் மற்றும் பேரன், பேத்திகளை கொண்ட இவரை யாரும் கவனிப்பதில்லை என சோபரான் சிங் கடும் மனவருத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார். இதனால் தனக்கு ஒரு துணை வேண்டும் என நினைத்து இருக்கிறார். மேலும் தன்னுடைய எண்ணத்தை தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கூறி இருக்கிறார்.

ஆனால் சோபரான் சிங்கின் மகன்கள் இதற்கு பேரன்-பேத்தி எடுத்த வயதில் திருமணம் அவசியமா? என கிண்டல் அடித்துள்ளனர். இதனால் திருமணம் செய்தே ஆக வேண்டும் என முடிவெடுத்த சோபரான் சிங் 11 ஆயிரம் வோல்டேஜ் உள்ள மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பதறிப்போன அந்த கிராம மக்கள் மின்சார அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து, முதற்கட்டமாக மின்சாரத்தை தடை செய்துள்ளனர். மேலும் சோபரான் சிங்கிடம் பேசி அவரை சமாதானப்படுத்தி மின்கம்பத்தில் இருந்து இறக்கவும் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.