ஐ.நா சபையில் பரதநாட்டிய நடனம் ஆடும் ரஜினி வீட்டு விஐபி
- IndiaGlitz, [Friday,March 03 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் பல்திறமை கொண்டவர் என்பது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது. '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய படங்கள் இயக்கி தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்த ஐஸ்வர்யா, சமீபத்தில் 'Standing On An Apple Box' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டதன் மூலம் தான் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதையும் நிரூபித்தார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபை அவரை தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதராக சமீபத்தில் நியமனம் செய்து கெளரவித்தது. இந்நிலையில் இம்மாதம் 8ஆம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா சபையில் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா கலந்து கொள்ளவுள்ளதாகசெய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'இந்த வருட உலக மகளிர் தினத்தில் ஐநா தலைமையகத்தில் பரதநாட்டிய நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை பெருமையாக கருதுகிறேன்' என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ரிகர்சலில் தற்போது அவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டியத்தின் மீது அபாரமான பற்று உள்ள ஐஸ்வர்யா ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் கடந்த ஆண்டு மீனாட்சி சித்தரஞ்சன் அவர்களுடன் இணைந்து நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டின் விஐபி ஒருவர் ஐநாவில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வது அவரது குடும்பத்தினர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பெருமைதான் என்பது குறிப்பிடத்தக்கது.