அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ரசிகை பலி.. சூர்யாவின் உருக வைக்கும் பதிவு..!
- IndiaGlitz, [Friday,May 19 2023]
அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சூர்யாவின் தீவிர ரசிகை ஐஸ்வர்யா என்பவர் பலியான நிலையில் நடிகர் சூர்யா இது குறித்து உருக்கமான ஒரு பதிவை செய்துள்ளார்.
தீவிரவாத தாக்குதலில் பலியான ஐஸ்வர்யாவின் பெற்றோர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் ’உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஈடு செய்ய முடியாத இந்த இழப்பு உண்மையில் என்னை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் உங்கள் மகள் ஐஸ்வர்யாவை இழந்தது துரதிர்ஷ்டமானது. ஒரு சக மனிதனாகவும் தந்தையாகவும் உங்கள் துயரத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்கள் மகளை நினைவு கூறும் போதெல்லாம் என் கைகளைப் பற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மகள் வானத்தில் பிரகாசமான நட்சத்திரமாக இருந்து நாம் அனைவரையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஐஸ்வர்யா குறித்து அவர் கூறிய போது ’நீங்கள் என் மீது வைத்திருந்த நேசம் என்றென்றும் நினைவில் நிற்கும் வகையில் உள்ளது. என்னை உங்களின் ஒரு பகுதியாக ஆக்கிய நீங்கள் இவ்வளவு சீக்கிரம் சென்று இருக்க வேண்டியது இல்லை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயபூர்வமான பிரார்த்தனைகளை பகிர்ந்து கொள்கிறேன்’ என்றும் சூர்யா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.