இந்தியாவின் முதல் பேமெண்ட் வங்கி. ஏர்டெல் தொடங்கியுள்ளது
- IndiaGlitz, [Thursday,November 24 2016]
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகிய ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முதல் பேமெண்ட் வங்கி சேவையை நேற்று முதல் ராஜஸ்தானில் சோதனை வடிவில் தொடங்கியுள்ளது. இந்த வங்கிக்கு கிடைக்கும் ஆதரவை பொருத்து இந்தியா முழுவதிலும் இந்த சேவையை விரிவு படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே ஏர்டெல் மணி, மற்றும் ஏர்டெல் வாலட் ஆகிய சேவையை வழங்கி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சேவையாக இந்த பேமெண்ட் வங்கி சேவையை தொடங்கியுள்ளது. ஏர்டெல் உள்பட 11 தனியார் நிறுவனங்களுக்கு இந்த வங்கிக்கான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியிருந்தாலும் ஏர்டெல் முதன்முதலில் இந்த சேவையை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
இதன்படி இனிமேல் ஏர்டெல் ஸ்டோர்கள் மூலம் வங்கிக்கணக்குகளை துவக்க முடியும். இந்தியாவில் உள்ள 10.5 லட்சம் ஏர்டெல் ஸ்டோர்கள் இனி வங்கி சேவை மையங்களாக செயல்படும்.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஏர்டெல் மொபைல் எண்களையே வங்கிக்கணக்கு எண்களாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சேவை மொபைல் ஆப், யு.எஸ்,எஸ்.டி , ஐவிஆர் முறையில் செயல்படும். அதுமட்டுமின்றி ஏர்டெல் பேமண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூ.1லட்சம் விபத்து காப்பீடு செய்யப்படும் என்றும் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும் என்றும் ஏர்டெல் பேமண்ட வங்கி சேவையின் தலைமை செயல் அதிகாரி சாஷி அரோரா கூறியுள்ளார்.