ரூ.15,500 கோடி இழப்பு: திவால் ஆகின்றதா ஏர்செல்?

  • IndiaGlitz, [Wednesday,February 28 2018]

சமீபத்தில் தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் திடீரென ஏர்செல் சேவைகள் முடங்கியது. மொபைல்போன் என்பது அனைத்திற்கும் அத்தியாவசியம் என்ற நிலையில் திடீரென ஏர்செல் சேவை முடங்கியதால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் உடனே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், படிப்படியாக இனிமேல் ஏர்செல் சேவை சரிசெய்யப்படும் என்றும் ஏர்செல் நிறுவனம் அறிவித்தது

இந்த நிலையில் ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல், பாங்க் ஆப் பரோடா உள்பட பல வங்கிகளில் பெற்ற ரூ.1500 கோடி கடனை திரும்ப செலுத்த முடியாததால் தங்களது நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி மும்பையில் உள்ள தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், டவர் சேவை அளித்து வந்த நிறுவனங்களுக்கும் நிலுவை பாக்கி இருப்பதால் ஏர்செல் சேவை மீண்டும் எந்த நேரத்திலும் முடங்க வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைச் செயல் அதிகாரி சங்கரநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஏர்செல் நிறுவனம் திவால் ஆகும் பட்சத்தில் அதன் வாடிக்கையாளர்கள் அதே எண்ணில் வேறு நிறுவனத்தின் சேவையை பெற்று வழக்கம் போல் தங்கள் பணியினை தொடர்வார்கள். ஆனால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் நிலை என்ன என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது