ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மேல்முறையீடு. சிபிஐ, அமலாக்கத்துறை ஆலோசனை
- IndiaGlitz, [Friday,February 03 2017]
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மாறன் சகோதரர்கள் உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் டெல்லி சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆலோசித்து வருவதாகவும், இதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சட்டநிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லியில் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, இந்த தீர்ப்பு மாறன் சகோதரர்களுக்கு நிரந்தர ஆறுதலை அளிக்காது என்று கூறியுள்ளார். மேலும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் சட்டவிரோத முதலீடுகள் செய்ய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அனுமதியளித்தது குறுத்து அவர் தொடர்ந்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் தயாநிதி மாறன் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பே முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தயாநிதி மாறன், நீதித்துறை மீது தான் வைத்திருந்த நம்பிக்கை நிரூபணமாகியுள்ளதாகவும், தனக்கு உறுதுணையாக இருந்த திமுகவினர் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்