Download App

Airaa Review

ஐரா: நயன்தாராவின் ஒன்வுமன் ஷோ

பத்திரிகையில் பணிபுரியும் தைரியமான பெண் யமுனா (நயன்தாரா). அப்பா, அம்மா பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் கல்யாணத்தை வெறுத்து கோபித்து கொண்டு பொள்ளாச்சியில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்கிறார். இல்லாத பேயை இருப்பது போல் வீடியோ எடுத்து யூடியூபில் பிரபலமாகும் யமுனாவுக்கு, உண்மையிலேயே சில அமானுஷ்யங்கள் நடப்பது தெரிகிறது. அதே நேரத்தில் சென்னையில் கலையரசன், பார்க்க செல்லும் நபர்கள் எல்லோரும் மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். நயன்தாராவை பயமுறுத்தும் அமானுஷ்யத்திற்கும், கலையரசன் பார்க்கும் கொலைகளுக்கும் உள்ள தொடர்பு தான் படத்தின் மீதிக்கதை

தைரியமான பத்திரிகையாளர் யமுனா, அப்பாவியான ராசியில்லாத பவானி என இரண்டு கேரக்டர்களில் நயன்தாரா நடித்துள்ளார். பவானி கேரக்டரில் அவரது வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிகிறது. காதல், வெட்கம், சோகம், பழிவாங்கும் வெறி என அனைத்து உணர்வுகளையும் அவர் சிறப்பாக வெளிப்படுத்துவது அவரது அனுபவத்திற்கு சர்வ சாதாரணம் தான். யமுனா நயன்தாராவை முதலில் தைரியமான பெண்ணாக காண்பித்துவிட்டு அதன்பின் படம் முழுவதும் பயப்படும் கேரக்டராக மாற்றியது முரண்பாடாக தெரிகிறது

கலையரசன் கேரக்டர் சுமாராகவே உருவாக்கப்பட்டிருப்பதால் அவரது நல்ல நடிப்பும் எடுபடவில்லை. படம் முழுவதும் அவர் இரண்டு நயன்தாராவுக்கும் அறிவுரை மட்டுமே சொல்கிறார்.

'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவுடன் கலக்கு கலக்கு என்று கலக்கிய யோகிபாபு, இந்த படத்தில் சிரிக்க வைக்க முயற்சிக்க மட்டுமே செய்கிறார். ஜெயபிரகாஷ்-மீராகிருஷ்ணன் ஜோடி நயன்தாராவின் பெற்றோர்களாக ஓரிரு காட்சிகளில் மட்டும் தோன்றுகின்றனர். பார்வதி பாட்டியாக நடித்திருக்கும் லீலாவின் நடிப்பு மட்டும் ஆறுதல்

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். தாமரை எழுதிய 'மேகதூதம்' பாடல் இன்னும் மனதில் ஒலித்து கொண்டே உள்ளது. இவரை தமிழ் சினிமா இன்னும் அதிகம் பயன்படுத்தினால் தரமான பாடல்கள் கிடைக்கும். 

சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு திகில் காட்சிகளில் அருமை. எடிட்டர் கார்த்திக் முடிந்தவரை படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஷாம் நடித்த '12B' என்ற படம் வெளிவந்தது. அதில் ஒரே ஒரு நிமிட தாமதத்தினால் பேருந்தை பிடிக்க முடியாத ஷாம் வாழ்க்கை எப்படி திசை மாறியது என்பதையும் ஒருவேளை பேருந்தை பிடித்திருந்தால் அவரது வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதையும் மிக அழகாக காண்பித்திருப்பார்கள். இதே கான்செப்ட் தான் இந்த படத்திலும் இயக்குனர் சர்ஜூன் பயன்படுத்தியுள்ளார். ஒரே ஒரு நிமிட தாமதம் காரணமாக லிப்ட்டை பிடிக்க முடியாத பவானியின் வாழ்க்கையில் நேர்ந்த துரதிஷ்டமான சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதை. 

இரண்டு நயன்தாராவுக்குமான தொடர்பை கடைசி வரை சஸ்பென்ஸ் உடன் கொண்டு சென்ற இயக்குனர் சர்ஜூனுக்கு பாராட்டுக்கள். ஆனால் அந்த தொடர்புக்கு அவர் கூறும் காரணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்பதால் படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு ஏமாற்றம் தெரிகிறது. இதுவரை வெளிவந்த எந்த பேய்ப்படத்திலும் இல்லாத பிளாஷ்பேக் இந்த படத்தில் இருந்தாலும் அந்த பிளாஷ்பேக் முடியும்போது எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதேபோல் காலங்காலமாக பேய்ப்படத்தில் வரும் பயமுறுத்தும் காட்சிகள் தான் இந்த படத்திலும் உள்ளது. கருப்பு நயன்தாரா கான்செட்ப், பட்டாம்பூச்சி வடிவில் பேய் ஆகியவை இயக்குனர் சர்ஜூனின் தனித்தன்மை

மொத்தத்தில் நயன்தாரா ரசிகர்கள் மற்றும் பேய்ப்படத்தை விரும்புபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்

Rating : 2.3 / 5.0