உலகிலேயே முதல்முறையாக விமான பயணத்துடன் 'கபாலி' படம்...!!!
- IndiaGlitz, [Friday,June 17 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது மட்டும் யாரும் எதிர்பாராத பல வினோதங்கள் நடக்கும் என்பதை ஏற்கனவே ரஜினி படங்கள் வெளியானபோது பல சம்பவங்களை நாம் அனுபவித்துள்ளோம். இந்நிலையில் வரும் ஜூலையில் வெளியாகவுள்ள 'கபாலி' படத்தின் ரிலீஸ் தினத்தன்று இதுவரை இந்திய திரையுலகில், ஏன் உலக திரையுலகில் யாருக்குமே நடக்காத ஒரு நிகழ்வு நடைபெறவுள்ளது.
ரஜினியின் 'கபாலி' படத்தின் ஏர்லைன் பார்ட்னராக சமீபத்தில் இணைந்த ஏர் ஆசிய விமான நிறுவனம் 'கபாலி' ரிலீஸ் தினத்தில் சிறப்பு விமானங்களை பெங்களூரில் இருந்து சென்னைக்கு இயக்க திட்டமிட்டுள்ளது.
காலை 6.10க்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் 'கபாலி சிறப்பு விமானம்' 7,10க்கு சென்னை வந்தடையும். அதேபோல் மாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும் அதே விமானம் 4 மணிக்கு பெங்களூர் சென்றடையும். டிக்கெட்டின் விலை ரூ.7860. இந்த டிக்கெட்டில் பெங்களூரில் இருந்து சென்னை சென்று வர விமான பயணம், கபாலி படத்தின் டிக்கெட், ஆடியோ சிடி, காலை உணவு, மதிய உணவு, சிநாக்ஸ், குளிர்பானங்கள் மற்றும் சென்னை விமான நிலையத்தில் இருந்து தியேட்டருக்கு சென்று வர வாகன வசதி ஆகியவை அடங்கும். இதுபோன்ற ஒரு சிறப்பு விமானத்தை உலக சினிமா இதுவரை கண்டதுண்டா?