அதிமுக தொண்டர்கள் ஆதரவு எப்போதும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் பக்கமே!

  • IndiaGlitz, [Thursday,February 25 2021]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளை சிறப்பிக்கும் பொருட்டு அன்றைய தினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதோடு பிப்ரவரி 24 ஆம் தேதியான நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தங்களது வீடுகளில் விளக்கேற்றி உறுதிமொழி எடுக்குமாறு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரும் வலியுறுத்தி இருந்தனர். அந்த வகையில் நேற்று மாலை 6 மணிக்கு பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வீடுகளில் விளக்கேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதோடு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் தலைமையில் ஓரணியாக நிற்பது தேர்தலில் தங்கள் பலத்தை காட்டுவது போல் பிரதிபலிக்கிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர் செல்வமும் கேக் வெட்டி மாறி மாறி ஊட்டிக் கொண்டனர். மேலும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கியும் பிறந்தநாளை சிறப்பித்தனர்.

இந்த விழாவிற்கு தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது, தேர்தல் நேரத்தில் தாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதையும் தேர்தலை சந்திக்க தயார் நிலையில் இருக்கிறோம் என்பதையும் வெளிப்படுத்துகிறது. சசிகலாவின் வருகைக்குப் பிறகு அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் நிர்வாகிகளுடனான சந்திப்பு போன்ற எந்தவொரு அசைவும் அதிமுகவில் சலசலப்பை உருவாக்காது என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் திரண்ட அணி உணர்த்துகிறது.

இப்படி இருக்கும்போது அதிமுக அணியில் பிளவு ஏற்பட போகிறது என்ற விமர்சனத்துக்கே இடமில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. சசிகலாவின் விடுதலையை முன்னிட்டு அதிமுக கட்சியின் பிளவு என்பது போன்ற வதந்திகள் பரபரப்பட்டன. தற்போதையை நிலைமையை வைத்துப் பார்க்கும்போது இது சாத்தியமே இல்லாத விஷயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.