மாநிலங்களவையிலும் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவளித்த அ.தி.மு.க..!
- IndiaGlitz, [Wednesday,December 11 2019]
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளதால் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியுள்ளது.
நீண்ட விவாதத்துக்கு பின்னர் மக்களவையில் நிறைவேறிய சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையை பொறுத்தவரை மொத்தம் 240 உறுப்பினர்கள் உள்ளனர். குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற பாஜகவுக்கு 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், பாஜகவுக்கு மாநிலங்களவையில் 83 உறுப்பினர்களே உள்ளனர். எனவே, அக்கட்சியை தவிர இதர உறுப்பினர்கள் 38 பேரின் ஆதரவு மசோதாவை நிறைவேற்ற தேவைப்படுகிறது.இந்நிலையில், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி.,எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், இலங்கையிலிருந்து அகதிகளாக வந்துள்ள தமிழர்கள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாஅவில் சேர்க்கப்படாதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். அத்துடன், இலங்கை தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் உரிமை வழங்கும் வகையில் மசோதாவில் திருத்தம் தேவை எனவும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமியர்களையும் இலங்கைத் தமிழர்களையும் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருக்கும் இந்த மசோதாவுக்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.