சென்னை மெரீனா: 144 தடை உத்தரவை மீறுவார்களா ஸ்டாலின் - சசிகலா?
- IndiaGlitz, [Friday,February 03 2017]
சென்னை மெரீனாவில் மாணவர்களின் எழுச்சி போராட்டம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் கடைசி தினத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இம்மாதம் 12ஆம் தேதி வரை மெரீனாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவில் முக்கிய அம்சங்களில் ஒன்று 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்பது. இந்நிலையில் இன்று அண்ணா நினைவு தினமாக உள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திராவிட இயக்க தலைவர்கள் சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா சமாதியில் மலர் வளையம் வைக்க கட்சியினர்கள் புடைசூழ் வருகை வர வாய்ப்பு உள்ளது.
144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தடை உத்தரவை மீறி கூட்டமாக வந்து அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்துவார்களா? அல்லது 5 பேருக்கும் குறைவாக வந்து செலுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை கூட்டத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினால் போலீசாரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.