ரஜினிக்கு அரசியலே தெரியவில்லை! நாஞ்சில் சம்பத்
- IndiaGlitz, [Monday,May 22 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்களின் சந்திப்பின்போது பரபரப்பான ஒருசில அரசியல் கருத்துக்களை தெரிவித்தார். அவற்றில் ஒன்று தமிழகத்தில் சிஸ்டமே சரியில்லை. அதை முதலில் மாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் இந்த கருத்துக்கு ஏற்கனவே ஆளும் கட்சியின் பிரபலங்கள் கூறிய கருத்துக்களை பார்த்தோம். இந்நிலையில் சசிகலா குடும்பத்தினர்களுக்கு இன்றளவும் விசுவாசமாக உள்ள நாஞ்சில் சம்பத் அவர்களிடம் செய்தியாளர்கள் ரஜினியின் 'சிஸ்டம்' குறித்த கருத்து குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், 'ரஜினிக்கு அரசியலே தெரியவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது' என்று கூறினார்.
அதேபோல் சமீபத்தில் தெர்மாகோல் மூலம் வைகை அணையை மூட முயற்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கூறியதாவது: எம்ஜிஆரை தவிர்த்து தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்களின் நிலையை ரஜினிகாந்த் நன்கு அறிவார். எம்ஜிஆருக்கு பின்னர் தமிழகத்தில் கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், விஜயகாந்த், டி.ராஜேந்தர் என அனைவருமே என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
ரஜினி மிகவும் விவரமானவர். நல்ல வியாபாரி. எப்போதும் தனது கருத்தை மாற்றி மாற்றிப் பேசக் கூடியவர். எம்ஜிஆரைத் தவிர்த்து நடிகர்கள் பின்னால் செல்வதை மக்கள் தவிர்த்துவிட்டார்கள். தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப்போகவில்லை' என்று கூறினார்.