விரைவில் அதிரடி உத்தரவு வரும். சசிகலாவை சந்தித்த பின் கருணாஸ் பேட்டி
- IndiaGlitz, [Tuesday,May 23 2017]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆரம்பத்தில் அதிமுக தலைவர்களும் நிர்வாகிகளும் சிறைக்கு சென்று சந்தித்து வந்தனர். ஆனால் தற்போது அவரை கிட்டத்தட்ட பெரும்பாலான தலைவர்கள் மறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சி தலைவரும் நடிகருமான கருணாஸ் தற்போது பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்துள்ளார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் பி.வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் அமைச்சர் ரமணா, மொளச்சூர் பெருமாள், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோரும் சென்றனர்.
சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் கட்சி, ஆட்சி குறித்த தற்போதைய நிலை குறித்து சசிகலாவிடம் கருணாஸ் விளக்கியதாவும், அவற்றை பொறுமையுடன் கேட்ட சசிகலா, சில ஆலோசனைகளையும் கூறியதாகவும் கருணாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், கூடியவிரைவில் கட்சி தொண்டர்களுக்கு சசிகலாவின் அதிரடி உத்தரவுடன் கூடிய கடிதம் வரும் என்றும் அதுவரை தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு இழுபறியில் உள்ள நிலையில் சசிகலாவிடம் இருந்து எந்த மாதிரியான உத்தரவு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிமுக வட்டாரங்களில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.