மக்கள் மையம் நடத்திய சர்வேயில் முன்னிலை வகிக்கும் அதிமுக!
- IndiaGlitz, [Tuesday,March 23 2021]
தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் கருத்துக் கணிப்புகள் குறித்த சர்வே முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனநாயகத்தின் குரல் கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகியது. தற்போது கிராமிய மக்கள் மற்றும் பயிற்சி மையம் எனும் அமைப்பு சார்பில் பெருவாரியான அளவில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
அந்த கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணி 112-120 இடங்களிலும் திமுக 80-90 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டு உள்ளது. மேலும் 24 இடங்களுக்கான முடிவுகளை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அந்த சர்வே தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தச் சர்வேயில் பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டு அதன் முடிவுகள் சரியான விகிதத்தில் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.
அந்த வகையில் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமிக்கு 36% வாக்குகளும் ஸ்டாலினுக்கு 34% வாக்குகளும் கிடைத்து இருக்கின்றன. மேலும் கொடுத்த வாக்குகளை அதிமுக நிறைவேற்றி இருக்கிறதா? என்ற கேள்விக்கு 51% மக்கள் அதிமுகவிற்கு சாதகமாக வாக்களித்து உள்ளனர். மேலும் தமிழக மக்களுக்கு இலவசத் திட்டங்கள் அவசியமா? என்ற கேள்விக்கு 29% மக்கள் ஆம் என்றும் 61% மக்கள் வேண்டாம் என்றும் வாக்களித்து உள்ளனர்.
அதோடு கடந்த அதிமுக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு நன்று என 43% பேரும் மோசம் என்று 32% பேரும் வாக்களித்து உள்ளனர். மேலும் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்விக்கு 32% அதிமுகவிற்கும் 31% திமுகவிற்கும் என பதில் அளித்துள்ளனர். இறுதியாக மக்கள் மையம் நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக 112-120 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.