பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு, பாடதிட்டம் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Tuesday,May 23 2017]
தமிழகத்தில் இனிமேல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த இரண்டு வகுப்புகளிலும் ஒவ்வொரு பாடத்திலும் 100 மதிப்பெண்களைக் கணக்கிட்டு, சராசரி அடிப்படையில் ஒரே சான்றிதழ் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து கூறியதாவது:
'11 மற்றும் 12-ம் வகுப்புகளில் 1200 மதிப்பெண்கள், 600 மதிப்பெண்களாக குறைக்கப்படும். நடப்பாண்டு முதல் 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். தேர்வு நேரம் மூன்றிலிருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட உள்ளது. மாலை நேரங்களில் அரசுப் பள்ளிகளில் ஒரு மணி நேரமும், சனிக்கிழமைகளில் மூன்று மணி நேரமும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் அதிக திறன் உள்ளவர்களாக மாற்றப்படுவார்கள்.
செய்முறை கையேடுகளை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இருக்கும் பொதுநிலை பட்டதாரிகளுக்கு தற்கால பணிகள், அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. பெற்றோர், ஆசிரியர் சங்கம் இந்தத் தற்காலிக பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருப்பர். 2018-19 கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும். அதேபோல 2019-2020 கல்வியாண்டில் 2,7,10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்கும். 2020-2021 கல்வியாண்டில் 3, 4, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.
சிறந்த கல்வியாளர்களை வைத்து பாடத்திட்டத்தில் மக்கள் மன ஓட்டத்துக்கு இணையாக மாற்றங்கள் கொண்டு வரப்படும். அனைத்துத் தரப்பினர் கருத்தும் பாடத்திட்டம் வரைவுக்குப் பெறப்படும். புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். 11ஆம் வகுப்பில் தேர்ச்சியடையவில்லை என்றால், மாணவர்கள் தொடர்ந்து 12ஆம் வகுப்பு படிப்பார்கள். தோல்வியடைந்த மாணவர்கள் அந்த ஆண்டு ஜூன் மாதமே மறுதேர்வு எழுதுவர்' எ
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.