சிவகங்கை மாவட்ட சேர்மன் பதவியை வெற்றிகரமாக கைப்பற்றிய அஇஅதிமுக!!!

 

முன்னதாக 3 முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட சேர்மன் பதவியை அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் கைப்பற்றி உள்ளார். இது கட்சிக்கு கிடைத்த பெருமையாகக் கருதப்படுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 16 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 8 இடங்களை அதிமுகவும் 6 இடங்களை திமுகவும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 இடங்களையும் பிடித்து இருந்தனர்.

இரு அணியினரும் சமமான வாக்குகளை பெற்று இருந்ததால் மாவட்ட சேர்மன் பதவியில் இறுதியான முடிவு எட்டப்படாமல் இருந்தது. மேலும் ஓட்டெடுப்பின்போது கடந்த 3 முறை பெரும்பான்மை நிரூபிக்கப்படாமல் இருந்ததால் வாக்கெடுப்பு முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 2 வார காலத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட சேர்மன் பதவிக்கான வாக்கெடுப்பு டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக இத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு டிசம்பர் 11 அன்று நடைபெறும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் 3 ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்ட இத்தேர்தல் நேற்று வெற்றிகரமாக மறைமுக வாக்கெடுப்பு முறையில் நடைபெற்று முடிந்தது.

இதில் அதிமுக சார்பில் சேர்மேன் வேட்பாளராக பொன்மணி பாஸ்கரும் திமுக சார்பில் நாகனி செந்தில்குமாரும் போட்டியிட்டனர். இருவரும் சமமான வாக்குகளை பெற்றிருந்த நிலையில் குலுக்கல் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. இறுதியில் அதிமுகவை சேர்ந்த பொன்மணி பாஸ்கரே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சேர்மன் பதவியை அதிமுகவே கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.