வந்துவிட்டது சுட்டெரிக்கும் கத்திரி வெயில்… என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

  • IndiaGlitz, [Tuesday,May 04 2021]

மே மாதம் வந்துவிட்டாலே ஒவ்வொருவருக்கும் கொணட்டாம்தான். காரணம் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு கிடைக்கும். ஆனால் இந்த 2021 ஆம் ஆண்டின் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. கடந்த 2020 பிப்ரவரி மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இன்று வரை திறக்கப்பட வில்லை. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரம் அடைந்து சாதாரணமாக ஒரே நாளில் 4 லட்சம் புதிய நோய்ப்பாதிப்புகள் ஏற்படுகிறது.

இப்படியான பெருந்தொற்றுக்கு இடையில் தற்போது அக்னி நட்சத்திரம் துவங்கி இருக்கிறது. மே 4 ஆம் தேதி (இன்று) முதல் மே 29 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. பொதுவா 25 நாட்கள் இருக்கும் இந்த அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு 26 நாளாக நீடித்து இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த அக்னிநட்சத்திர நாட்களில் கோடைக் காலத்தில் வீசும் வெயிலை விட சற்று கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனவே சுட்டெரிக்கும் கத்திரி வெயிலில் இருந்தும் தற்போது இந்தியா முழுக்க பீதியை ஏற்படுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றில் இருந்தும் எப்படி தப்பித்துக் கொள்வது என்பதே பெருத்த சந்தேகமாக மாறியுள்ளது. இந்நிலையில் கத்திரி வெயில் நாட்களில் பாதுகாப்பாக இருப்பது குறித்து சில பரிந்துரைகள்…

செய்ய வேண்டிய முதல் விஷயம்: கத்திரி வெயில் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தாலும் மதியம் 1-3 மணி வரை ரேடிஷேன் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இந்த நேரத்தில் எக்காரணத்தைக் கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

உடை : கத்திரி வெயில் காலத்தில் பருத்தி உடைகளை அணியலாம். குறிப்பாக கறுப்பு நிறத்திலான ஆடைகளையும் குடைகளையும் தவிர்ப்பது நல்லது. காரணம் கறுப்பு நிறம் வெயிலை அதிகம் ஈர்க்கும் தன்மைக் கொண்டது என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும்.

நோய்கள் : வெயில் அதிகமாக இருக்கும்போது உடலில் உள்ள ஈர்ச்சத்து குறைந்துவிடும். அதேபோல உப்புச்சத்தும் வெளியேறி விடும். இதனால் தலைச்சுற்றல், மயக்கம் வருவது போன்ற குறைபாடுகள் தோன்றும். அதேபோல அதிக சூட்டினால் வியர்வை அதிகமாக இருக்கும். இதனால் தோல் சார்ந்த வியாதிகள், வேர்க்குறு, சிறு கொப்புளம் போன்றவை ஏற்படும். அடுத்து அதிக சூட்டினால் சிலருக்கு சிறுநீரகத்தில் கல் உண்டாகும். அடுத்து அல்சர் குறைபாடு ஏற்படுவதற்கும் இந்த வெயில் ஒரு முக்கியக் காரணமாக இருக்கும். இதைத் தவிர்ப்பதற்கு அன்றாட பழக்க வழக்கங்களிலும் உணவு முறைகளிலும் பெருத்த மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

சாப்பிட வேண்டிய உணவுகள் : கோடைக்கு உற்ற நண்பன் தயிர், மோர், இளநீர், நொங்கு, பதநீர் (சுண்ணாம்புக்கள்) போன்றவை. இதைத்தவிர சீரகத் தண்ணீர், வெந்தயத் தண்ணீர் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். வெள்ளரிப் பிஞ்சு, சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகள், கீரைகள் அதில் குறிப்பாக பொன்னாங்கன்னி, வெந்தயக்கீரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்போது நீர்ச்சத்துடன் சேர்த்து அதிக குளிர்ச்சியும் கிடைக்கும். அதேபோல தர்பூசணி, முளாம்பழம், போன்ற நீர்ச்சத்து உள்ள பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.

அதோடு எலும்பிச்சை இந்த கத்திரி வெயில் நேரத்தில் ஒரு முக்கிய விஷயமாக உதவி செய்யும். தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படும்போது எலும்பிச்சை பழச்சாறு உடலுக்கு வலுச்சேர்க்கும். மயக்கத்தைப் போக்கும். அதேபோல சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு பழத்தையும் அதிகளவு எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள சிட்ரிக் பொருட்கள் உடலில் குறைந்துபோன எனர்ஜியை உடனடியாக சரிசெய்து விடும்.

மேலும் இந்தக் கத்திரி வெயில் நேரத்தில் சாதாரணமாக ஒருவர் குறைந்தது 3 லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிப்பதை கட்டாயமாக்க வேண்டும். அப்படி நீர் குடிக்கும்போது உடலில் குறைந்து போன குளுக்கோஸை மேலும் கூட்டுவதற்கு அவ்வபோது குளுகோஸ் பவுடரையும் சேர்த்து அருந்தலாம்.

தானிய வகைகளில் பச்சைப்பயிறு, முளைக்கட்டிய பயிறுகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் புதினா உடல் சூட்டை தணிக்கும் என்பதால் அதிகளவு புதினாவை உடலில் சேர்த்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய பொருட்கள் : வெயில் காலத்தில் சூடு தரக்கூடிய உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. கோதுமை சூடான தானியம் என்பதால் இதைத் தவிர்ப்பது நல்லது. சிறுதானிய வகைகளான கம்பு, தினை, கேழ்வரகு போன்ற பொருட்களும் சூடுதான். எனவே இந்தப் பொருட்களை சாப்பிடும்போது கூடவே தயிர் அல்லது மோரை சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். பிராய்லர் கோழி அதிக சூடு என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்நேரத்தில் வெயிலுக்கு இதமாக இருக்கிறது என பாட்டிலில் அடைத்து வைத்து விற்கப்படும் செயற்கைப் பானங்களை இந்த நேரத்தில் குடிக்கக் கூடாது. இது செரிமானத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி தேவையற்ற சிக்கலை புதிதாக உருவாக்கி விடும். அதேபோல இந்தக் காலக்கட்டத்தில் அதிக காரம், அதிக மசாலா பொருட்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனால் அல்சர், உணவுச் செரிமானத்தில் பிரச்சனை போன்றவை ஏற்படும்.

குளியல்: வாரத்திற்கு 2 முறை நல்லெண்ணெய் குளியல் அவசியம். தலையில் எண்ணெய் இல்லாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும். அதிக சூடு உள்ளவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் பிசினை தண்ணீரில் ஊற வைத்து அதைச் சாப்பிடலாம். அதேபோல கற்றாழையை உடலில் தேய்த்துக் கொள்வது, தலையில் தேய்த்து குளிப்பது போன்றவற்றை செய்யலாம். தயிர் நல்ல குளிர்ச்சி என்பதால் இந்தக் காலக்கட்டத்தில் தயிரை தலையில் வைத்துக் குளிக்கலாம். சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் இதுபோன்ற குளியலை செய்யும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.

அதிகச் சூட்டை தவிர்க்க அவ்வபோது நல்லெண்ணெய்யை அடிவயிறு, கால் பாதம் மற்றும் நகக்கண்களில் தேய்த்துக் கொள்ளலாம். மேலும் தோல் பிரச்சனை ஏற்படும்போதும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை உடலில் தேய்த்துக் கொள்ளலாம்.

புதுத் திட்டம் : அக்னி நட்சத்திரக் காலக்கட்டங்களில் பொதுவாக திருமணம், நிச்சயதார்த்தம், வளைக்காப்பு போன்ற விஷயங்களுக்கு யாரும் தடை சொல்வதில்லை. ஆனால் புதுமனை புகுவிழா, வீட்டுமனைக்கு பூஜை, புதிய வீட்டிற்கு பால் காய்ச்சுவது, கிணறு வெட்ட பூஜை போடுவது போன்ற விஷயங்களுக்கு பெரியவர்கள் தடை சொல்வதும் உண்டு. இதுகுறித்து மூத்தவர்களிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.

கால்நடைகள் : வீட்டில் உள்ள விலங்குகளுக்கும் இந்தக் காலக்கட்டம் கடினமாகத்தான் இருக்கும். குறிப்பாக ஆடு, மாடு, எருமை போன்ற விலங்குகள் சாதாரணச் சூட்டை விட அதிகச் சூட்டை தாங்கிக்கொள்ள கஷ்டப்படும். அதற்கு ஏற்றாற்போல உணவிலும், நீரிலும் அதிகக் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

கால்நடைகளுக்கு இந்த நேரத்தில் அம்மை, கோமேரி போன்ற நோய்களும் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சலும் ஏற்படுவது சாதாணமாகவே இருக்கும். இதற்கு எச்சரிக்கையாக மருந்து மாத்திரை, அதிலும் குறிப்பாக உணவில் மாற்றம் செய்து கொள்வது நல்லது.

செடி, மரம் : வீட்டில் இருக்கோம் என்ற பேர்வழியில் கோடைக் காலத்தில் வீட்டில் இருக்கும் செடி அல்லது மரத்தை பிடித்து வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். காரணம் அதிகச் சூட்டைத் தாக்குபிடித்து அந்த செடி அல்லது மரம் மீண்டும் தழைப்பது கடினம்.

ஆன்மீகம் : சிவன் கோவில்களில் தாரா அபிஷேகம் என்பது கத்திரி வெயில் நேரத்தில் மிகவும் விவேஷமாகக் கருதப்படுகிறது. சிவ லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை தொங்கவிட்டு அதிலிருந்து சொட்டு சொட்டாக 24 மணி நேரமும் லிங்கத்தின் மீது தண்ணீர் பட வைப்பது தாரா அபிஷேகம் எனப்படுகிறது.

அதேபோல இந்தக் காலக்கட்டத்தில் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் ஏழைகளுக்கு தண்ணீர் பந்தல், மோர்ப்பந்தல் ஆகியவற்றை அமைத்து தாகத்திற்கு தண்ணீர், மோர், ஏதாவது பானத்தைத் தானமாக கொடுக்கலாம். அதோடு செருப்பு, குடைகளையும் தானமாக கொடுக்கலாம். வீட்டில் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீரை அன்றாடம் தெளிக்கலாம். அம்மன் வழிபாடு, காலை வேளையில் சூரிய பூஜை போன்றவை இந்தக் கத்திரி வெயில் காலத்தில் மிகவும் பிரசித்தம் என்பதும் குறிப்பிடத்தக்கது.