'விசித்திரன்' வெற்றியை அடுத்து ஆர்.கே.சுரேஷின் அடுத்த பட அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடித்து தயாரித்த 'விசித்திரன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒயிட் ரோஸ்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை 'கயல்' ஆனந்தி முக்கியமான வேடத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் முன்னாள் தமிழக காவல்துறை உயரதிகாரி எஸ். ஆர். ஜாங்கிட் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை டி. என். கபிலன் கவனிக்க, சண்டைப் பயிற்சியை பிரபு அமைக்கிறார். சைக்கோ திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த 'ஒயிட் ரோஸ்' திரைப்படத்தை ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். கே .சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ஆரி உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் ராஜசேகர் பேசுகையில்,“ அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, சைக்கோ திரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையாக ‘ஒயிட் ரோஸ்’ உருவாகியிருக்கிறது.” என்றார்.
'விசித்திரன்' திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் ஆர். கே. சுரேஷ் நடிப்பில் தயாராகும் சைக்கோ திரில்லர் படம் என்பதால், 'ஒயிட் ரோஸ்' படத்திற்கு அறிவிப்பு நிலையிலேயே ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments