மீண்டும் கமல் படத்தில் இணைகிறாரா மோகன்லால்? பிரபல இயக்குனர் பேச்சுவார்த்தை!

  • IndiaGlitz, [Sunday,December 25 2022]

கமல்ஹாசன் நடித்த ’உன்னைப் போல் ஒருவன்’ என்ற திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் முக்கிய கேரக்டரில் மோகன்லால் நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல்ஹாசன் - மோகன்லால் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மலையாளத்தில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி என்பவரின் இயக்கத்தில் உருவான ’ஜல்லிக்கட்டு’ திரைப்படம் சமீபத்தில் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டது என்பது தெரிந்ததே. இவரது இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் ’மலைக்கோட்டை வாலிபன்’. இந்த படத்தில் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் மோகன்லாலுடன் கமல் ஹாசனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மீண்டும் கமல்ஹாசன் மோகன்லால் இணைந்து ஒரே படத்தில் நடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.