சுஜித்தை அடுத்து ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி! திருந்தாத அரசுகள்

  • IndiaGlitz, [Monday,November 04 2019]

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து நடுக்காட்டுப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஐந்து நாட்களாக மீட்க முடியாமல் கடைசியில் பிணமாகவே மீட்கப்பட்டான். இந்த துயர சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது

இந்த சம்பவத்திற்கு பின்னர் இன்னொரு குழந்தையின் உயிர் இதேபோன்று போய்விடக்கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து தமிழக அரசு பயன்படுத்தாமல் உள்ள ஆழ்துளை கிணற்றை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது. ஒருசில மாவட்ட கலெக்டர்கள் இதுகுறித்த உத்தரவையும் பிறப்பித்தனர்.

இந்தநிலையில் ஹரியானா மாநிலத்தில் ஹர்சிங்புரா என்ற கிராமத்தை ஐந்து வயது சிறுமி ஒருவர் நேற்று ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளதாக வெளிவரும் செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 50 அடி ஆழத்தில் உள்ள இந்த சிறுமியை மீட்க மீட்புப்படையினர் தீவிர முயற்சியில் உள்ளனர்.

சுஜித் மரணத்தை பாடமாக கொண்டு உடனடியாக மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சிறுமிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது