தமிழ் சூப்பர் ஸ்டாரை அடுத்து மலையாள சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் த்ரிஷா!

  • IndiaGlitz, [Tuesday,September 10 2019]

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா, இந்த ஆண்டு பொங்கல் அன்று வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தனது நீண்ட நாள் ஆசையை நிறைவு செய்து கொண்டார். இந்த நிலையில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அடுத்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் அவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மோகன்லால், மீனா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் த்ரிஷ்யம். இந்த படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் மீண்டும் மோகன்லால் நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவிருப்பதாகவும், இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ‘த்ரிஷ்யம்’ போலவே இந்த படமும் த்ரில் திரைப்படமாக இருக்கும் என கருதப்படுகிறது .

தற்போது கார்த்தி, ஜோதிகா நடித்து வரும் படம் ஒன்றை ஜித்துஜோசப் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் மோகன்லால், த்ரிஷா நடிக்கும் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது. இந்த படம் த்ரிஷாவின் இரண்டாவது மலையாள படம் ஆகும். இதற்கு முன் அவர் நிவின் பாலியுடன் ’ஹே ஜூடு’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.