நீரிழிவு நோயால் கால் துண்டிப்பு.. ரஜினி, சூர்யாவை அடுத்து விக்ரம் செய்த உதவி..!
- IndiaGlitz, [Thursday,August 03 2023]
பிரபல தயாரிப்பாளர் துரை நீரிழிவு நோய் காரணமாக கால் எடுக்கப்பட்டுவிட்ட நிலையில் அவருக்கு நடிகர் விக்ரம் உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் நடித்த சேது, பிதாமகன் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தவர் துரை. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இவரது மருத்துவ செலவிற்கு ரஜினிகாந்த், சூர்யா, கருணாஸ் உள்பட ஒரு சிலர் உதவி செய்துள்ளனர்.
இந்த நிலையில் துரை ஓரளவு குணமாகிவிட்டாலும் நீரிழிவு நோய் காரணமாக அவரது ஒரு காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவருக்கு செயற்கை கால் பொருத்த வேண்டிய நிலை உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் செயற்கைக் கால் பொருத்துவதற்கு தேவையான பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் இது குறித்த தகவல் அறிந்த விக்ரம் உடனே செயற்கை கால் பொருத்துவதற்கு தேவையான பணத்தை கொடுத்து உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிதாமகன் திரைப்படம் வெளியானபோது தயாரிப்பாளர் துரைக்கும், விக்ரமுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் தற்போது அவருக்கு விக்ரம் உதவி செய்துள்ளதை திரை உலகினர் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.