ரஜினியை அடுத்து தமிழக அமைச்சரை பாராட்டிய 'அண்ணாத்த' நாயகி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாத வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா குறித்த அப்டேட்டை அவ்வப்போது தமது டுவிட்டரில் தெரிவிப்பது மட்டுமின்றி களத்தில் இறங்கி பல்வேறு பணிகளை செய்து வருகிறார். கொரோனா தடுப்பு முகாமில் சோதனையிடுவது, மருத்துவமனையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிடுவது என அவரது பணியை எதிர்க்கட்சியினர் கூட பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும், ரஜினியின் ‘அண்ணாத்த’ பட நாயகிகளில் ஒருவருமான குஷ்பு, தமிழக அமைச்சர் விஜய்பாஸ்கர் அவர்களை தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது:

சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், நெருக்கடி காலகட்டங்களில் தீவிரமாக களமிறங்கி செயல்படுவதை ஒரு பழக்கமாகவே வைத்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்கள். சாப்பிட கூட நேரமில்லாமல் ஆங்கங்கே உணவருந்துகிறார், தமிழக மக்களை காப்பாற்ற ஓடி ஓடி உழைக்கிறார், உங்களுக்கு தலை வணங்குகிறேன் அய்யா’ என்று கூறியுள்ளார். மேலும் நாம் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக நிற்போம் என்றும், ஒற்றுமையாக செயல்படுவோம் என்றும் குஷ்பு பதிவு செய்துள்ளார். குஷ்புவின் இந்த டுவீட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று ரஜினிகாந்த் தனது டுவிட்டரில், ‘கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு சிறப்பான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் அரசுக்கு தனது பாராட்டுக்கள்’ என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.