ரஜினி, விஜய், கமல்ஹாசனை அடுத்து மேலும் ஒரு மாஸ் நடிகருக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Thursday,August 12 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அகில இந்திய நடிகராக மாறிவிட்டார் என்றும் அதுமட்டுமின்றி சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் சரி, வில்லன் கேரக்டராக இருந்தாலும் சரி, ஹீரோவாக இருந்தாலும் சரி அனைத்து விதமான கேரக்டர்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் சேதுபதி தற்போது நடித்து முடித்துள்ள மற்றும் நடித்து வரும் திரைப்படங்களின் எண்ணிக்கை சுமார் இருபதை தொட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினியின் ‘பேட்ட’, விஜய்யின் ’மாஸ்டர்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, கமல்ஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் மாஸ் நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி வில்லனாக நடித்த ’உப்பென்னா’ என்ற தெலுங்கு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.