5 ஆண்டுகளுக்கு பின் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்த சூப்பர் ஹிட் பட இயக்குனர்!

  • IndiaGlitz, [Sunday,September 06 2020]

’நேரம்’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் அதன்பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்கிய ’பிரேமம்’ என்ற திரைப்படமே அகில இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த படத்தில் ’மலர் டீச்சர்’ என்ற கேரக்டரில் அறிமுகமான சாய்பல்லவி தென்னிந்திய அளவில் புகழ்பெற்றார்.

இந்த நிலையில் ஐந்து வருடங்களாக இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் எந்த படங்களையும் இயக்கவில்லை என்பதும் அவரது அடுத்த திரைப்படம் தமிழ் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அல்போன்ஸ் புத்ரன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ‘பாட்டு’. இந்த படத்தில் பகத் பாசில் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படம் மலையாளத்தில் மட்டுமே உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் மூலம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இசையமைப்பாளராகவும் மாறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அல்போன்ஸ் புத்ரன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளார். ஐந்து வருடங்களுக்குப் பின் அல்போன்ஸ் புத்ரன் தனது அடுத்தப் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளது மலையாள திரையுலக ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.