ரூ.1 லட்சம் மின் கட்டணம்: பிரசன்னாவை அடுத்து மின்துறை மீது குற்றம்சாட்டிய தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Thursday,June 25 2020]

சமீபத்தில் நடிகர் பிரசன்னா தனது வீட்டிற்கு மிக அதிகமாக மின்கட்டணம் வந்ததாகவும் மின் துறையினர் செய்யும் முறைகேடுகளில் இதுவும் ஒன்று என்று டுவிட் செய்திருந்தார். இந்த ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மின்துறை அவருடைய மின் கட்டணம் குறித்து விளக்கம் அளித்தது. அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட பிரசன்னா அதன் பின் தனது டுவிட்டரில் வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிரசன்னாவை அடுத்து ஜீவா நடித்த ’கோ’என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ உள்ளிட்ட ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்த கார்த்திகா நாயர், மும்பை மின்துறை மீது தனது டுவிட்டரில் புகார் கூறியுள்ளார்.

ஜூன் மாத மின்கட்டணம் தன்னுடைய மும்பை வீட்டிற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் வந்திருப்பதாகவும் இவ்வளவு அதிகமாக வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் மின்துறை இதில் முறைகேடு செய்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு வந்த இதே பிரச்சனை தனது பகுதியில் உள்ள பலருக்கும் வந்ததாகவும் இதுகுறித்து மகாராஷ்டிர அரசு உடனடியாக தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கார்த்திகா நாயரின் இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.