மீண்டும் இணையும் ஜெயம் ரவி - கார்த்தி.. ஆனால் இம்முறை வேற லெவல்..!

  • IndiaGlitz, [Monday,May 01 2023]

கார்த்தி மற்றும் ஜெயம் ரவி இணைந்து நடித்த ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உட்பட பலர் நடிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய ஜெயம் ரவி ’பொன்னின் செல்வன்’ இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதற்கும், எனது நடிப்புக்கு பாராட்டுக்கள் வந்து கொண்டிருப்பதை கேட்டும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு அந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது முக்கியம். மணிரத்னம் ஒருவரால் மட்டுமே இது சாத்தியம்.

மேலும் நான் அவ்வப்போது மணிரத்னம் அவர்களிடம் ஒன்லைன் கதை சொல்வேன், அதைக் கேட்ட அவர் நீ தாராளமாக கதை எழுதலாம் என்று கூறினார். அவர் சொன்ன பிறகுதான் என் மீது நம்பிக்கை அதிகரித்து ஒரு சில கதைகளை எழுதி உள்ளேன். நடிகர் கார்த்தி இடம் கூட ஒரு கதை சொல்லி இருக்கிறேன், எனது இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிப்பார்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து ஜெயம் ரவி இயக்குனராகவும் கார்த்தி ஹீரோவாகவும் நடிக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி தற்போது ’இறைவன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ’சைரன்’ என்ற படத்திலும் நடித்து வரும் அவர் விரைவில் அறிமுகம் இயக்குனர் ஒருவரின் படத்திலும் நடிக்க உள்ளதாகவும் இந்த படம் ஒரு பேண்டஸி படம் என்றும் கூறப்படுகிறது.