நிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்!!!
- IndiaGlitz, [Thursday,December 03 2020]
தமிழகத்தின் வங்கக்கடல் பகுதியில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து கடந்த 26 ஆம் தேதி புதுச்சேரி-மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலை ஒட்டி தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தது. இந்த நடவடிக்கைகளினால் பெரிய சோதாரம் எதுவும் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.
இந்த நிவர் புயலினால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் பேரிடரால் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
முன்னதாக நிவர் புயல் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்து இருந்தார். அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு செய்து கொடுக்கும் என உத்தரவாதம் அளித்து இருந்தார். இந்நிலையல் நிவர் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிடுவதற்கு மத்திய பேரிடர் குழு தற்போது தமிழகத்தில் ஆய்வு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.