'காப்பான்' பாணியில் பறந்து வந்த ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள்: பாகிஸ்தான் அனுப்பியதா?
- IndiaGlitz, [Thursday,December 26 2019]
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கிய ’காப்பான்’ திரைப்படத்தில் விவசாய நிலத்தை சூறையாட ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகளை வில்லன் அனுப்பும் காட்சி ஒன்று பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் உண்மையில் நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் தாரட் என்ற கிராம பகுதியில் திடீரென ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளி கூட்டம் விவசாய நிலங்களை சூறையாடி அழிக்கும் சம்பவத்தால் அந்த பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கலாம் என்றும் இது குறித்து ஆய்வு செய்ய 15 குழுக்களை குஜராத்திற்கு மத்திய அரசு அனுப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்து ஏற்கனவே ஐநா.சபையின் உணவு மற்றும் வேளாண்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் ஆனால் அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததால் தற்போது பூச்சிகளின் படையெடுப்பை எப்படி கட்டுப்படுத்துவது என புரியாமல் விழிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தியை இயக்குனர் கேவி ஆனந்த் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ‘காப்பான்’ திரைப்படத்தில் வருவது போல் உண்மையாகவே நடந்துள்ளது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.