கமல்ஹாசனை ஒருமையில் விமர்சித்த மேலும் ஒரு அமைச்சர்
- IndiaGlitz, [Wednesday,August 16 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசு மீது வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வரும் அமைச்சர்கள் கமல்ஹாசனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமான கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு அவரை ஒருமையிலும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் கமல்ஹாசனை ஒருமையில் விமர்சித்தார் என்பது தமிழக மக்கள் அறிந்ததே
இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊழல் குறித்து கமல் பதிவு செய்த டுவீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த டுவீட் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நிருபர்கள் கருத்து கேட்க முயன்றப்போது மீண்டும் கமல்ஹாசனை ஒருமையில் அதாவது 'அடப்போங்கப்பா அவனைப்போய்' என்று கூறி நிருபரது மைக்கை தட்டிவிட்டு சென்றுவிட்டார்.
வாக்களிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசின் தவறை சுட்டிக்காட்ட உரிமை உள்ள நிலையில் அரை நூற்றாண்டு திரைப்படத்திற்காக சேவை செய்தவர், ஒழுங்காக வரிகட்டும் ஒரு பிரஜை, மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒருவரை 'அவன்', இவன்' என்று ஏக வசனத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் விமர்சிப்பதை அரசியல் விமர்சகர்கள் கண்டித்து வருகின்றனர். குற்றச்சாட்டிற்கு சரியான பதில் கூறுவதுதான் அமைச்சரின் கடமையே தவிர, ஏக வசனத்தில் பேசி குற்றச்சாட்டை திசை திருப்புவது அழகல்ல என்பதை அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.