கோயம்பேடை அடுத்து எம்ஜிஆர் நகரையும் பதம் பார்த்த கொரோனா!
- IndiaGlitz, [Monday,May 18 2020]
சமீபத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்குவதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் தனிமனித இடைவெளி என்பது காற்றில் பறக்கவிடப்பட்டது. இதனை அடுத்து கோயம்பேடு காரணமாக சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும்
இதனால் அதிரடியாக தமிழக அரசு கோயம்பேடு மார்க்கெட்டை மூட உத்தரவிட்டது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பதில் தற்போது திருமழிசை மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக காய்கறி, பழ மார்க்கெட்டுக்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் அதிகமாக காய்கறி வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களில் ஒன்று எம்ஜிஆர் நகர் மார்க்கெட். இந்த மார்க்கெட்டுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் காய்கறி வாங்க வருவதுண்டு. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டை அடுத்து சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனையடுத்து எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் 150 வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் எம்ஜிஆர் நகரில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. எம்ஜிஆர் நகர் மார்க்கெட் வியாபாரிகளுக்கான கொரோனா பரிசோதனை முடிவு செய்யப்பட்ட பின்னர்தான் கோயம்பேட்டை போலவே எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டும் மூடப்படுமா? என்பது குறித்து தெரிய வரும்